×

வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் லட்சதீப விழாவில் ஜொலித்த தெப்பல் குளம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பள்ளிகொண்டா, ஆக.26: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் 6ம் வெள்ளியான நேற்று லட்சதீப பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கடந்த 5ம் தேதி ஆடி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7வது நாளில் தேரோட்ட திருவிழாவும், 5ம் வெள்ளியில் தெப்போற்சவ திருவிழாவும் நடைபெற்றது.

இந்நிலையில், 6ம் வெள்ளியான நேற்று காலை மூலவர் எல்லையம்மன் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் அம்மன் மஹிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காலை முதலே அம்மனை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மேலும், 6ம் வெள்ளியின் முக்கிய நிகழ்வான லட்ச தீப பெருவிழா நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோயில் குளத்தின் படிக்கட்டுகளை சுற்றிலும் தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

லட்ச தீபம் ஏற்றிய பின்னர் குளத்தின் நீரில் பிரதிபலித்த விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலித்து காண்போரின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. பின்னர், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்தில் அமர்ந்து உற்சவர் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி, கணக்காளர் பாபு, திருக்கோயில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் லட்சதீப விழாவில் ஜொலித்த தெப்பல் குளம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Teppal ,Lakshdeepa festival ,Kettuvanam Hahanayamman Temple ,Pallikonda ,Lakshadweep Festival ,Theppal ,Kettuvanam Behanayamman Temple ,
× RELATED விருத்தாசலத்தில் மாசிமக விழா...